வல்லான் விமர்சனம்..
வல்லான் விமர்சனம்..
ஸ்டோரி…
ஒரு கொலை நடக்கிறது.. அதைப் பற்றிய போலீஸ் விசாரணை தான் இந்த வல்லான்..
ஒரு இளம் தொழிலதிபர் கொல்லப்படுகிறார்.. அதனை விசாரிக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி பணிக்கு திரும்புகிறார்.. அவர் அந்த கொலை வழக்கை விசாரிக்க விசாரிக்க அவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது.
அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர்.. அந்த சதிகளை முறியடித்து கொலை வழக்கை முடித்தாரா.? குற்றவாளியை கண்டுபிடித்தாரா.? என்பதுதான் இந்த வல்லான் கதை..
கேரக்டர்ஸ்…
சமீப காலமாக வரும் திரைப்படங்களில் ஹீரோ காக்கிச் சட்டை அணியக்கூடாது என்பதற்காகவே கலர் உடையில் விசாரிக்கும் முறையை பல இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்னவோ.? ஏற்கனவே பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்திருக்கும் சுந்தர் சி அந்த அனுபவ நடிப்பை இந்த படத்திலும் காட்டி சிறப்பு சேர்த்து இருக்கிறார்..
நாயகியாக தன்யா ஹோப்.. கொஞ்ச நேரம் வந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறார்..
ஹெபா பட்டேல்.. கிளாமருக்கு நான் கேரண்டி என அதிரடி காட்டியிருக்கிறார்.. அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே., இளம் தொழிலதிபராக கமல் காமராஜ், அவரது மனைவியாக அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன் ஆகிய நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் மணி பெருமாள் காட்சிகளை மணிமணியாக காட்டி அழகு சேர்த்திருக்கிறார்.. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை திரில்லர் கதைக்கு மிரட்டல் பலம் சேர்த்து இருக்கிறது..
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் மற்றும் கலை இயக்குனரின் பணிகள் பாராட்டுக்குரியவை..
இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன் : சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து ஒவ்வொரு காட்சியிலும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.. திரில்லர் கதை எங்கும் திசை திரும்பக் கூடாது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப பிளாஷ்பேக் காட்சிகள் ஆக்சன் மற்றும் காதல் என குறைவாகவே வைத்து கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..
Vallaan movie review

