BIKER விமர்சனம் 4.25/5.. உங்களுக்கு பைக் சத்தம் பிடிக்காமல் இருந்தாலும் இந்த பைக்கர் பிடிக்கும்
BIKER விமர்சனம் 4.25/5.. உங்களுக்கு பைக் சத்தம் பிடிக்காமல் இருந்தாலும் இந்த பைக்கர் பிடிக்கும்
ஸ்டோரி…
ராஜசேகர் – இவரின் மகன் ஷர்வானந்த்.. அப்பா என்பதை விட இவர் ஒரு பைக் ரேஸ் பயிற்சியாளர் என்று சொல்லலாம்.. மகனை பாட்ஷா படத்தை பார்க்க விடாமல் பாதியிலேயே வெளியேறி பைக் ரேஸ் பயிற்சி செய்ய சொல்லும் கண்டிப்பான தந்தை இவர்..
உலக அளவில் மகன் பைக் ரேசர் சாம்பியன் MOTOCROSS RACING ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான பயிற்சிகளையும் கொடுத்து போட்டிகளில் பங்கேற்க வைக்கிறார்..
ஒரு கட்டத்தில் மாளவிகா மீது மயக்கம் கொள்ளும் நாயகன் ஷர்வானந்த் காதலிக்காக இந்த ரேசை விடும் சூழ்நிலை உருவாகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது?
மகனின் பிடிவாதம் வென்றதா .? தந்தையின் லட்சியம் வென்றதா.? மனைவியின் அன்பு வென்றதா.? இறுதியில் இந்த பைக் ரேஸ் பயணம் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ஷர்வானந்த் – விகாஸ் நாராயன்
டாக்டர் ராஜசேகர் – புல்லட் சுனில்
மாளவிகா நாயர் -அனன்யா
நிரூப் – அன்வர்
மாஸ்டர் சௌர்யா – இஷான் நாராயன்
எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்த ஷர்வானந்த்… அவரே இந்த படத்தின் நாயகன்.. 22 வயது இளைஞன் 42 வயது தந்தை என வயதுக்கு ஏற்ப உடல் மொழியிலும் உடல் அமைப்பிலும் வெரைட்டி காட்டியிருக்கிறார்.. வெறிகொண்ட நிஜ பைக் ரேஸ் சாம்பியனாகவே மாறி சபாஷ் போட வைத்திருக்கிறார்..
இரண்டாம் நாயகன் படம் முழுக்க ராஜசேகர் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.. இதுதாண்டா போலீஸ் படம் பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் இவரை மறந்திருக்க மாட்டார்கள்.. கண்டிப்பான அப்பா.. பாசமான மாமனார்… அன்பான தாத்தா என மாறுபட்ட நடிப்பில் கவர்கிறார்..
நாயகியாக மாளவிகா.. பைக் ரேஸரை காதலித்து ஒரு கட்டத்தில் பைக் ரேஸ் வெறுக்கும் இவரது மனநிலை ஒரு மனைவியை எடுத்துக் காட்டுகிறது.. அதே சமயம் எனக்கு தேவை சாம்பியன் அல்ல கணவன் தான் என இவர் சொல்லும்போது கைத்தட்டலை அள்ளிக் கொள்கிறார்..
அன்வர் கேரக்டரில் நடித்த பைக் ரேஸர் வீரன் நிரூப் அருமையான நடிப்பு.. திடீரென்று காணாமல் போன இவர் கிளைமாக்ஸ் என்ட்ரி கொடுக்கும் போது உணர்ச்சி மயம்.. குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் சௌர்யா தாத்தாவின் மனதை மட்டுமல்ல ரசிகர்களின் அன்பையும் அள்ளிக் கொள்கிறான்.

டெக்னீசியன்ஸ்…
எழுத்து & இயக்கம் : அபிலாஷ் ரெட்டி
வழங்குபவர்: விக்ரம் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி
இசை: ஜிப்ரான் வைபோதா
பேனர்: UV கிரியேஷன்ஸ்
DOP: ஜே யுவராஜ்
எடிட்டிங் : அனில் பசாலா
கலை இயக்குனர்: ஏ பன்னீர் செல்வம்
எழுத்தாளர்கள்: எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மாதால
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
நடன இயக்குனர்கள்: ராஜு சுந்தரம், சேகர் விஜே, விஸ்வ ரகு
ஆடை வடிவமைப்பாளர்கள்: தோட்டா விஜய பாஸ்கர், ரஜினி, ரேகா பொக்கரபு
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெகதீஷ் தலசிலா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
இந்த பைக் ரேஸ் படத்தில் காதலுக்கும் டூயட்க்கும் இடமுண்டு என சூப்பர் பாட்டு வைத்திருக்கிறார் ஜிப்ரான்.. பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனமைப்பு.. சூப்பர்..
படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளியே வந்தாலும் ஜிப்ரான் கொடுத்த பைக் சத்தங்கள் நாம் செவியை விட்டு நீங்காது.. அதை ரசிக்கும்படியாக கொடுத்து படம் முழுவதும் பைக் வைத்து இசையில் பந்தாடியிருக்கிறார்…
எப்படி பின்னணி இசையில் இத்தனை பைக் சத்தங்களை சேர்த்தாரோ தெரியவில்லை.. அத்தனையும் இரைச்சல் இல்லாத தெளிவான இசை..
ஒரே நாளில் ஜிப்ரான் இசை அமைத்த பைக்கர் மற்றும் லீடர் இரண்டு படங்களும் வந்துள்ளது.. இரண்டிற்கும் இவரின் பின்னணி இசை தான் மிகப்பெரிய பலம்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. பைக் செல்லும் காடுமலை சேர் சகதி என அனைத்தையும் அழகாக படம் பிடித்து நம் மீது பைக் டயர் சேர் அடிக்கும்படி ரசிக்க வைத்திருக்கிறார்… அணில் என்பவர் எடிட்டிங் செய்து இருக்கிறார் எந்த இடத்திலும் சோர்வடையாத எடிட்டிங் சிறப்பு..
80% சதவீதம் பைக் ரேஸ் கார்ப்பரேட் அரசியல் என இருந்தாலும் 20% காதல்.. குழந்தை குறும்பு, தந்தை கண்டிப்பு, மாமனார் பாசம், பேரன் நேசம் என அனைத்தையும் சென்டிமீட்டர் குறையாமல் சென்டிமென்டில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி..
கிரிக்கெட் ஃபுட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளின் மோகம் ஒரு பக்கம் இருந்தாலும் பைக் பிரியர்களின் மனதை வென்ற படமாக அமைந்திருக்கிறது..
பைக்கில் சென்று இரண்டு மலை நடுவே இருக்கும் பள்ளத்தை தாண்டும் அந்த காட்சி எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.. பைக் மீது வெறி கொண்ட மனிதர்களின் மனதிற்கு நெருக்கமாக இந்த பைக்கர் படம் அமைந்திருக்கிறது..
Biker movie review

