Madha Gaja Raja Event : நடுக்கத்தில் தவித்த விஷால்..; பாராட்டாதவரே பாராட்டிட்டாரு – சுந்தர் சி
Madha Gaja Raja Event : நடுக்கத்தில் தவித்த விஷால்..; பாராட்டாதவரே பாராட்டிட்டாரு – சுந்தர் சி
கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் ‘மதகஜராஜா’ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் பல ஆண்டுகள் நடந்த பிரச்சினையால் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 12ஆம் தேதி ‘மதகஜராஜா’ திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. அந்நிறுவனம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால், படம் வெளியாகாமல் இருந்தது..
பல வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்து வருவதால் இந்த அறிவிப்பையும் ரசிகர்கள் நம்பவில்லை.. ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று சென்னையில் மதகஜராஜா படத்தின் பிரஸ்மீட் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் விஷால் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மத கஜ ராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சந்தானம், பாலிவுட் நடிகர் சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. ஆர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்டு எம் நாதன் மேற்கொண்டுள்ளார்..
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர் சி பேசும்போது.. ஒரு நாள் திருப்பூர் சுப்பிரமணியம் இரவு 11:30 மணி அளவில் என்னை அழைத்து இருந்தார்.. அவர் எப்போதும் சீக்கிரம் தூங்கும் சுபாவம் கொண்டவர்… அவர் இந்த நேரத்தில் அழைக்கிறார் ஏதாவது எமர்ஜென்சியாக இருக்குமோ என்று நினைத்து அந்த போனை எடுத்தேன்.. அவர் சமீபத்தில் மதகஜராஜா படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்ததாக என்னை அழைத்து பாராட்டினார்.. அது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.. பெரும்பாலும் அவர் படத்தை பற்றி பாராட்டுவதில்லை.. படத்தின் வசூல் என்ன என்பதைப் பற்றிதான் அடிக்கடி பேட்டி கொடுப்பார்.. அவருடைய பாராட்டு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி..
இந்தப் படம் மூலமாக விஷால் தம்பி கிடைச்சான். இப்போ குடும்பத்துல ஒரு நபராக இருக்கான். முன்பெல்லாம் 80ஸ் ல ஜனரஞ்சகமான படம் வரும். அந்த மாதிரி ஒரு படம் தான் ‘மதகஜராஜா’.
இந்தப் படம் தாமதமானதால் எனக்கு வருத்தம் இருந்தது.. ஆனால் படத்தில் ரிலீஸ் அறிவிக்கப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்ததை அறிந்தேன்.. எல்லாரும் ‘லேட்டா வந்தாலும்… லேட்டஸ்ட்னு போட்டாங்க.. ”
இந்தப் படத்திற்காக விஷால் 8 பேக் வைத்து நடித்தார்.. ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போனது.. அப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் விஷால்.. இந்த படம் வந்தே ஆகணும் என்று நான் நினைத்ததற்கு காரணம் விஷாலின் உழைப்பு வெளியே தெரிய வேண்டும் என்று நினைத்தேன்..
முதல் முறையாக விஜய் ஆன்டணிகூட இணைஞ்சேன். விஜய் ஆன்டணி மாதிரி கமர்சியல் மியூசிக் பண்றதுக்கு சிலர்தான் இருக்காங்க.. அவர் இப்போது பெரிய நடிகராக வளர்ந்து விட்டாலும் இது போன்ற படங்களுக்கு இசையமைத்து கம்பேக் கொடுக்கணும்..” என்றார் சுந்தர் சி.
விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை.. அவருக்கு வைரல் காய்ச்சல் இருந்தது.. ஆனாலும் இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. அவரால் மைக்கை பிடித்து சரியாக கூட பேச முடியவில்லை.. கை கால் நடுக்கத்துடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால் விஷாலுக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்..
மேலும் விஷாலை போல அர்ப்பணிப்புடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என புரமோஷனுக்கு வராத நடிகர் நடிகைகளை ரசிகர்கள் திட்டிக் கொண்டிருந்தனர்..
இந்த நிகழ்வில் மேடையில் விஷால் – விஜய் ஆண்டனி மற்றும் சுந்தர் சி ஆகியோரே தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி பேட்டி கண்டார்.. பல கேள்விகளை அவர் கேட்க படக்குழுவினர் பதில் அளித்தனர்..
Vishal Vijayantony Sundar Khusboo participated in MadhaGajaRaja event

*இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,*
“இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.
அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பார்களே அதே மாதிரி விஷால் சிங்கிள் டேக் பாடகர். ஒரே டேக்கில் சரியாக பாடிவிட்டாரா என்று கேட்காதீர்கள். இந்த பாடலை சொதப்ப வேண்டும் என முடிவு செய்து தான் உருவாக்கினோம். அதனால் விஷால் முதல் டேக்கில் பாடுவதையே ஓகே என எடுத்துக்கொண்டோம். இரண்டாவது டேக்கில் ஒருவேளை நன்றாக பாடிவிட்டால் என்ன செய்வது ? அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு பிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இத்தனை வருடங்கள் தாண்டி இவ்வளவு வெற்றி கொடுத்தும் நீங்கள் எவ்வளவு பணிவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை பார்க்கும்போது தான், சீரியஸான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலகலப்பான படங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயமாக முயற்சிப்பேன். அதேபோல என்னுடைய நண்பன் விஷாலுக்கு வெடி படத்தை தொடர்ந்து நான் இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது. வெடி படத்தை போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன்” என்று கூறினார்.
*நடிகர் விஷால் பேசும்போது,*
“இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த பாடகர் விருது கிடைக்கும். அதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் ஒரு பாடலைப் பாட விஜய் ஆண்டனியும் சுந்தர்சியும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை வழக்கமான ஒரு பாடகர் பாடக்கூடாது.. ஒரு புதியவர் பாட வேண்டும்.. ஆனால் இந்த பாடலை பாடிய பிறகு அவர் வாழ்க்கையில் பாடவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தபோது சரியாக நான் உள்ளே நுழைந்தேன். உடனே இவர் தான் அந்த பாடகர் என என்னை முடிவு செய்து விட்டார்கள்.
இந்த படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற ஒரு 15 மணி காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி. குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.
*நடிகை குஷ்பு பேசும்போது,*
“இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்தது. சில நேரங்களில் இந்த படம் ரிலீசாக போகிறது என்று சொல்வார்கள். பின்னர் அது அப்படியே நின்றுவிடும். ஆனால் எது எப்போது நடக்க வேண்டுமோ, எல்லாம் நன்மைக்கே என்பது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக மதகஜராஜா ரிலீஸ் ஆகிறது. இந்த இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள்” என்றார்.

