TEST டெஸ்ட் விமர்சனம்

TEST டெஸ்ட் விமர்சனம்

TEST டெஸ்ட் விமர்சனம்

 

ஸ்டோரி…

மாதவன் – நயன்தாரா இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.. மாதவன் ஒரு சயின்டிஸ்ட்.. எரிபொருளுக்கு மாற்றாக ஒரு புதிய பொருளை கண்டுபிடித்த இவருக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை.. இதனால் மனைவிக்கு தெரியாமல் 50 லட்சம் கடனை வாங்கி அங்கீகாரம் பெற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்..

ஒரு கட்டத்தில் இவருக்கு பணத்தை கொடுத்தவர் டார்ச்சர் செய்கிறார்.. அதே சமயத்தில் நயன்தாரா குழந்தை பெறுவதற்கான சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க சித்தார்த் – மீரா ஜாஸ்மின்.. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்.. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த சித்தார்த் சில தோல்விகளால் துவண்டு கிடக்கிறார்.. எனவே இவரை அணியிலிருந்து நீக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்கின்றனர்.. ஆனால் தோல்வியுடன் அணியில் இருந்து விலக விரும்பவில்லை. வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என கிரிக்கெட் அணி வாரியத்தை எதிர்த்து நிற்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு ஜோடிகளையும் கிரிகெட் டெஸ்ட் மேட்ச் இணைக்கிறது.. அது எப்படி.? என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை.. ஒரு ஜோடிக்கு அதுவே சவாலாகவும் மற்ற ஜோடிக்கு அதுவே வியாபாரமாக மாறுகிறது.. அது எப்படி ?

கேரக்டர்ஸ்…

மாதவன் நயன்தாரா சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல திறமை மிக்க நடிகர்களை வித்யாசமான கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சசிகாந்த்..

இதில் ஆட்டநாயகனாக அசத்தியிருக்கிறார் மாதவன்.. விஞ்ஞானியாக அரசு அங்கீகாரம் கிடைக்காமல் வேதனை ஒரு பக்கம்,. ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாமல் படும் அவஸ்தைகள் என மறுபக்கம் என பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..

பல படங்களில் டப்பிங் குரல் மூலம் ஜொலித்த நயன்தாரா இந்த படத்தில் சொந்த குரலில் பேசி உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நீ ஜாலிக்காக குடித்தாய்.. ஆனால் நான் தாயாக முடியாமல் மலடி என்ற பெயர் எனக்கா? என நயன்தாரா கேட்கும் போது.. குடிகார கணவனால் அல்லல்படும் மனைவியரின் வேதனையை பிரதிபலிக்கிறார்..

கிரிக்கெட்டில் தோல்வியுற்றதால் வீட்டில் கூட நட்சத்திர அந்தஸ்தை இழந்து அர்ஜுன் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் சித்தார்த்.. குழந்தையை விட கிரிக்கெட் முக்கியமா? என கேட்கும் மீரா ஜாஸ்மின் எதார்த்த மனைவியாக வாழ்ந்திருக்கிறார்..

நாசர், சித்தார்த் மகன் மற்றும் காளி வெங்கட் ஆகியோரும் கச்சிதம்.. பல படங்களில் காமெடி செய்த ஆடுகளம் முருகதாஸ் இதில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம்..

ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹிலின் பணி ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக மாதவன் மற்றும் சித்தார்த்த் வீடுகளின் தோற்ற அமைப்பும் அதற்கு ஏற்ப லைட்டிங்கும் சிறப்பு..

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எதார்த்த வாழ்க்கை.. அதே சமயம் ஒரு கிரிக்கெட் நட்சத்திர வீரரின் குடும்ப வாழ்க்கை என இரண்டு கதைக்களத்தை இணைத்து புதிய முயற்சியில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த்.. அதே சமயம் ஆமை வேக திரைக்கதை நமக்கு அயற்சியை தருகிறது..

வெற்றியாளர்கள் தான் இங்கு சாதனையாளர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.. ஆனால் வெற்றிக்காக போராடுபவர்களை இந்த சமூகம் மதிப்பதில்லை என்று கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் சசிகாந்த்..

இந்த டெஸ்ட் திரையரங்குகளில் வெளியாகாமல் netflixல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Test movie review