லைன்மேன் விமர்சனம்..
லைன்மேன் விமர்சனம்..
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் உதயகுமார்.. ஆனால் ஈரோடு மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்டமாக மாற்றி அவர் ஏன் திரைக்கதை அமைத்தார் என்பதுதான் புரியாத புதிர்..
ஸ்டோரி…
அரசு ஊழியர் லைன் மேன் சுப்பையா (சார்லி).. இவரது மகன் ஜெகன் பாலாஜி. தான் என்ன கஷ்டப்பட்டாலும் தன் மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார்.. அவரும் நன்றாக படித்து புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடிக்கிறார்..
அதன்படி சூரியன் மறையும் போது தெரு விளக்குகள் எரிவது போலவும் சூரியன் உதிக்கும் போது தெரு விளக்குகள் அணைவது போலவும் ஆட்டோமேட்டிக்கான மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இதற்கு அங்கீகாரம் பெற மாவட்ட ஆட்சியரை பலமுறை அணுகுகிறார்.
ஒரு கட்டத்தில் தமிழக முதல்வரை சந்தித்தால் மட்டுமே தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என சென்னைக்கு செல்கிறார்.. ஆனால் அங்கு சென்ற பின் அவரது ப்ராஜெக்டை ஒரு நபர் திருடி சென்று விடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? தனது அறிவியல் கண்டுபிடிப்பை இந்த உலகிற்கு அவரால் அறிமுகம் செய்ய முடிந்ததா?என்பது தான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
கதையின் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் லைன் மேன் ஆக சார்லி.. ஊர் என்ன சொன்னாலும் தன் மகனுக்கு உற்சாகம் கொடுக்கும் இவரது உரிமைக்குரல் கவர்கிறது..
காதலில் கூட கவனம் சிதறாமல் கடமை மிக்க மகனாக எதார்த்த நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஜெகன் பாலாஜி..
தூத்துக்குடி பெண்ணாகவே தன் நடிப்பை தூக்கி நிறுத்தி இருக்கிறார் நாயகி சரண்யா ரவிச்சந்திரன்.. இவரது உடல் மொழியும் தூத்துக்குடி மொழியும் ரசிக்க வைக்கிறது.. இவரது தோழியாக வருபவரும் கவர்கிறார்..
விநாயகராஜ், அருண்பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ், அதிதி பாலன் ஆகியோரது கதாபாத்திரங்கள் கதைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
சொல்ல வந்த கண்டுபிடிப்பு கதையில் திடீரென கந்துவட்டி கொடுமையை காட்டி கதையை ஓட்டத்தை மாற்றி இருக்கிறார் இயக்குனர்.. அதுபோல தேவைக்கேற்ற காதல் காட்சியை வைத்து இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவு உப்பளக் காற்று உணர்வை தருகிறது.. தீபக் நந்தகுமாரின் இசையும் பின்னணியும் படத்துக்குப் பலம். சிவராஜின் படத் தொகுப்பு ரசிக்கலாம்..
அறிமுக இயக்குனர் உதயகுமார் தனது முதல் முயற்சியை சமூக சிந்தனையோடு இயக்கியிருப்பது பாராட்டுகுறியது.. இந்த படம் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது..
படத்தின் கிளைமாக்ஸ் எதார்த்தமாக வாழ்வியலோடு இணைந்து இருக்கிறது..
Lineman movie review


