அமரன் விமர்சனம் 4.5/5… ராணுவத்திற்கு சமர்ப்பணம்

அமரன் விமர்சனம் 4.5/5… ராணுவத்திற்கு சமர்ப்பணம்

 

 

அமரன் விமர்சனம் 4.5/5… ராணுவத்திற்கு சமர்ப்பணம்

 

ஸ்டோரி…

முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார்.. வழக்கம்போல நடுத்தர குடும்பங்களில் கிளம்பும் எதிர்ப்பு இவருக்கும் வலுக்கிறது.. அம்மா கீதாவுக்கு விருப்பமில்லை என்றாலும் அப்பா மகனின் விருப்பத்திற்கு துணையாக நிற்கிறார்.

அது போல முகுந்துக்கு துணையாக காதலி இந்து ரெபெக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) உற்சாகப்படுத்தி கரம் கோர்கிறார்.

ராணுவத்தில் சேர்ந்த முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார்.

ஆனால் சாய் பல்லவியின் அப்பா இந்த ராணுவ வீரரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. ராணுவ வீரனுக்கு என் மகளை கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது?என்பதெல்லாம் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருவருமே முதலிடம் பிடிக்கின்றனர்.. இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இந்த அமரனுக்கு மகுடம் சூட்டி இருக்கின்றனர்.

முகுந்தன் கேரக்டருக்காகவே தன்னை வருத்தி அந்த உடல் மொழியை கூட ராணுவ வீரனுக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.. பல படங்களில் ஜாலியாக சுற்றித்திரிந்து சிவகார்த்திகேயன் இதில் கம்பீரமான ராணுவ வீரன் உருவத்தை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்..

ஒரு ராணுவ வீரனின் மனைவி.. குடும்பத்தின் எதிர்ப்பு அனைத்தையும் தன் முகபாவனைகளில் கொடுத்து கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி..

ராணுவ பட்டாளத்திற்கு சென்ற பின் அவர் வருகை எதிர்நோக்கி ஒவ்வொரு நாட்கள் எண்ணிக்கொண்டு அவரைக் கண்ட பின் அந்த அன்பை வெளிக்காட்டும் தருணங்களில் சாய் பல்லவி சபாஷ் பல்லவி ஆகிறார்.

தான் ராணுவத்தில் இறந்து விட்டாலும் நீ அழக்கூடாது என்று சிவகார்த்திகேயன் கேட்டது கொண்டதற்கு ஏற்ப தன் கணவன் இறந்த பிறகு அழ முடியாமல் தேம்பித் தேங்கி அவர் நிற்கும் அந்த காட்சி சாய்பல்லவிக்கு தேசிய விருதை பெற்று தரும் என உறுதியாக சொல்லலாம்..

சிவகார்த்திகேயனின் நண்பர்கள்.. அப்பா குடும்பம் சாய் பல்லவியின் குடும்பம் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருந்து இந்த அமரனை ரசிகர்கள் மனதில் அமர வைத்துவிட்டனர்.

டெக்னீசியன்ஸ்…

படத்திற்காக எந்த கமர்சியலையும் கலக்காமல் ராணுவ வீரன் வாழ்க்கை அவர்களின் குடும்ப வாழ்க்கை என இரண்டையும் அழகாக கலந்து ஒரு சமூக பொறுப்பு உணர்வுடன் ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.. இவர் ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார்.. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அமரன் படத்தை இயக்கி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறார்.

படத்திற்கு பக்க பலமாக இருந்து தன் தன் பணியில் மிரட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ்.. ஹே மின்னலே சக்கர அந்தப் பாடல் என்றும் காதலின் கீதமாக ஒலிக்கும்..

படத்தின் ஒளிப்பதிவு எடிட்டிங்கும் படத்திற்கு பக்கபலம்.. அதுபோல படத்தில் எந்த சமரசம் செய்து கொள்ளாமல் படத்தில் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப படத்தை தயாரித்து ரசிகர்களுக்கு அற்புதமான படைப்பு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

மறைந்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு இந்த படத்தை அர்ப்பணித்து இருக்கிறது படக்குழு.. அவருடைய மனைவி மகள் & அவருடைய ஆத்மா இந்த படத்தை பார்ப்பதன் மூலம் சாந்தி அடையட்டும்..

ஆக அமரன்.. இந்திய மண்ணிற்கு சமர்ப்பணம்..

Amaran movie review