3BHK விமர்சனம்… நடுத்தர குடும்பஸ்தனின் நியாயமான வாழ்வியல்
3BHK விமர்சனம்… நடுத்தர குடும்பஸ்தனின் நியாயமான வாழ்வியல்
ஸ்டோரி…
ஒரு நடுத்தர குடும்பத்திற்கு சென்னையில் வீடு வாங்குவது எவ்வளவு பெரிய சிரமம் என்பதை காட்சிப்படுத்தி அழகான காவியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்..
மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் சரத்குமார்.. இவர் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டனாக பணிபுரிந்து வருகிறார்..
இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்க தங்களது பேமிலி பட்ஜெட்டில் சிக்கனமாக வாழ்ந்து வருகின்றனர்..
இந்த சூழ்நிலையில் எவ்வளவு செலவு செய்தும் படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார் சித்தார்த.. இதனால் மேலும் டியூஷன் செலவு + இன்ஜினியரிங் படிப்பு செலவு… என்பதால் குடும்பத்தில் திண்டாட்டமே வருகிறது.
இதனால் பணம் சேர்க்க முடியாமல் தவிக்கிறார் சரத்குமார்.. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது.. இருந்த பணமும் சிகிச்சைக்கு செலவாக சூழ்நிலையில் குடும்பத்தினர் என்ன செய்தனர்.? அவர்கள் நினைத்த மாதிரி வீடு வாங்க முடிந்ததா? இந்த குடும்பத்தின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சித்தார்த் & சரத்குமார் இவர்கள் இருவரையும் இதற்கு முன்பு இப்படி ஒரு கேரக்டரில் நாம் பார்த்ததில்லை.. அப்படி ஒரு அருமையான நடிப்பை இருவரும் போட்டி போட்டுக் கொடுத்துள்ளனர்.
முதல் பாதி முழுவதும் சித்தார்த் என்றால் இரண்டாம் பாதி சரத்குமார்.. இருவரும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர் முக்கியமாக சித்தார்த் பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் பின்னர் 35 வயது எட்டிய ஒரு வாலிபனாகவும் தன்னுடைய மெச்சூரோன நடிப்பை கொடுத்திருக்கிறார்..

கம்ப்யூட்டர் வரவு இதனால் வேலை இழக்கும் அபாயம் என நிம்மதியில்லாத வாழ்க்கையை அனுபவிக்கும் எதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார் சரத்குமார்..
பத்து வார்த்தை கூட தேவயாணி பேசியிருப்பாரா என்று தெரியவில்லை.. ஆனால் தன் நடிப்பை பேச வைத்து விட்டார்.. மகன் மகள் கணவன் ஆகியோர் கோபப்படும் காட்சிகளில் சமாதானப்படுத்தும் ஒரு பொறுப்பான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.
மீத்தா ரகுநாத் மற்றும் சித்தார்த்தின் மனைவியாக சைத்ரா ஆகியோர் அருமை.. அதிலும் வசதியான குடும்பம் என்று என்னை கட்டி வைத்தீர்கள்.. ஆனால் அங்கு வாழ முடியவில்லை என்று மீத்தா பேசும் போது பெண்களின் மனது கலங்கும்..
கொஞ்ச நேரமே வந்தாலும் காமெடி முத்திரை பதித்து விடுகிறார் யோகி பாபு.. தலைவாசல் விஜய், சுப்பு பஞ்சு, விவேக் பிரசன்னா ஆகியோர் சிறப்பு.. அதிலும் விவேக் பிரசன்னாவின் நடிப்பு ஐடி கம்பெனிக்கு ஏற்ப ஹைடெக் நடிப்பு..
டெக்னீசியன்ஸ்…
அம்ரித் ராம்நாத் இசையில் உயிரோட்டம்.. ஆனால் கதை ஒரு கட்டத்தில் வேகம் எடுக்கும் போது அந்த பாடல் களத்திற்கு பொருந்தவில்லை..
தினேஷ் பி. கிருஷ்ணன், ஜித்தின் தனிஸ்லாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு பக்கபலம். கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு கச்சிதம்..

முதல் தலைமுறையில் உள்ள ஒரு குடும்பஸ்தன் ஆசைப்பட்ட கனவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் அந்த உணர்வை இரண்டாம் தலைமுறையினர் புரிந்துக் கொண்டு அவர்கள் அந்த கனவை நிறைவேற்றி வைக்கும் கனவை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்..
முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களை பொறுமையாக சொன்ன இயக்குனர் இரண்டாம் தலைமுறையினர் உடனே வீடு வாங்குவதையும் இன்னும் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.. அப்படி சொல்லி இருந்தால் அது இன்றைய தலைமுறையினருக்கு பழைய தலைமுறையினரின் வலியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்..
3 BHK movie review

