தண்டேல் விமர்சனம் 3.75/5… தலைவனின் (தேசிய) காதல்

தண்டேல் விமர்சனம் 3.75/5… தலைவனின் (தேசிய) காதல்

 

 

தண்டேல் விமர்சனம் 3.75/5… தலைவனின் (தேசிய) காதல்

 

ஸ்டோரி…

மீனவ சமுதாயத்தை சேர்ந்த நாகசைதன்யாவும் சாய்பல்லவி சிறு வயது முதலே காதலித்து வருகின்றனர்.. வங்காள விரிகுடா பகுதியில் வசிக்கும் நாகசைதன்யா குஜராத்தை சேர்ந்த தொழிலதிபருக்காக வருடத்தில் 9 மாதங்கள் அரபி கடல் பகுதிக்கு சென்று மீன்களை வேட்டையாடி வருவது வழக்கம்..

மூன்று மாதங்கள் மட்டும் தன் வீட்டிற்கு வந்து சாய் பல்லவி உடன் காதலை வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் புயல் ஒன்றில் மீனவ உறவினர் ஒருவர் மரணம் அடையவே இனி மீன் வேட்டைக்கு செல்ல வேண்டாம் என சாய் பல்லவி அன்பு கட்டளை இடுகிறார்.

தான் ஒரு மீனவ தண்டேல் (தலைவன்). தன்னால் மட்டுமே அந்த குழுவை வழிநடத்த முடியும் என்று செல்கிறார்.. என்னை மீறி சென்றால் இனி உன் முகத்தில் விழிக்கவே மாட்டேன்.. நம் காதல் முறிந்து விடும் என எச்சரிக்கிறார் சாய் பல்லவி.. ஆனாலும் காதலியின் வார்த்தையை மீறி மீன் வேட்டைக்காக செல்கிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது.. காதலர்கள் கை கூடினார்களா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி மீன் குழம்பும் பழைய சாதமும் போல பக்கா பொருத்தம்.. இப்படி நெருக்கமான காதலிடையே எப்படி பிரிவு வரும் என்று நாம் நினைக்கையில் அதற்கு ஒரு சின்ன காரணத்தை வைத்து படம் முழுக்க நம்ம தவிக்க விட்டுள்ளார் இயக்குனர்.. சிறப்பு தோற்றத்தில் வரும் கருணாகரன் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது..

ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலாவடி, அம்மாவாக வரும் கல்பலதா ஆகிய கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்..

டெக்னீசியன்ஸ்…

இடைவேளையில் வரும் புயல் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. படகுகள் தத்தளிக்கும் காட்சிகளில் ஷம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு கண்களை இமை மூடாமல் காண வைக்கிறது..

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பலம் சேர்க்கிறது.. சிவன் கடவுள் பாடலும்.. முதல் காதல் பாடலும் அதற்கு சாய் பல்லவி போடும் ஆட்டமும் இனி அடிக்கடி ரீல்ஸ்களில் பார்க்கலாம்..

தமிழ் ரசிகர்கள் முன்பெல்லாம் தெலுங்கு சினிமாவை கிண்டல் அடித்த காலம் உண்டு.. ஆனால் இன்று தெலுங்கு சினிமாவின் தொழில்நுட்பம் கலைஞர்களின் பங்களிப்பு அதன் பிரம்மாண்டம் என அனைத்தும் வியக்கும் வகையில் உயர்ந்துள்ளது.. அதற்கு இந்த தண்டேல் படமும் ஒரு சிறந்த உதாரணம்.

முதல் பாதையில் முழுக்க முழுக்க நாகு – சாய் பல்லவியின் காதலை உணர்வு பூர்வமாக சொல்லி காதலர் மாதத்தில் காதலர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

இடைவேளை வரை இருந்த புயல் வேகம் இடைவேளைக்குப் பிறகு தென்றலா மாறுவதால் கொஞ்சம் சோர்வை தருகிறது.. அந்த காட்சிகளை கொஞ்சம் வெட்டி இருக்கலாம்..

காதல்.. இந்திய பாகிஸ்தான் சிறைச்சாலை இந்திய தேச பக்தி, தலைவனின் பொறுப்புணர்வு, மீனவ தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை, மீனவர்களின் வாழ்வாதாரம், ஆன்மீகம் என அனைத்தையும் கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து இருக்கிறார் இயக்குநர் சந்து மொண்டேட்டி..

Thandel movie review