KaMuKaPi கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் விமர்சனம்..

KaMuKaPi கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் விமர்சனம்..

 

கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் விமர்சனம்..

 

ஸ்டோரி…

கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் என்ற இந்த தலைப்பே கதையை சொல்லி விட்டதாகவே கருதுகிறோம்..

காதலர்கள் கல்யாணத்திற்கு முன் வாழும் வாழ்க்கை.. கல்யாணம் செய்த பின்னர் வாழும் வாழ்க்கை.. இவை இரண்டையும் கதைக்களமாக எடுத்து கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

சினிமாவில் இயக்குனராக வேண்டுமென ஆசைப்படுகிறார் நாயகன் விக்னேஷ் ரவி.. இதற்கு உறுதுணையாக இருந்து வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார் சரண்யா ரவிச்சந்திரன்..

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களுக்கு ஈகோ பிரச்சனை வரவே என்ன நடக்கிறது.? கல்யாணத்திற்கு முன் காதலித்த இவர்களின் வாழ்க்கை கல்யாணத்திற்கு பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நிறைய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த சரண்யா ரவிச்சந்திரன் இதில் கதையின் நாயகியாக அவதாரம் எடுத்து கதையை தாங்கி நிற்கிறார்.. குழந்தை பெற்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை மூச்சு விடாமல் பேசும் காட்சியில் லேடி தனுஷாக வியக்க வைக்கிறார் சரண்யா..

ஸ்மார்ட் ஆக வருகிறார் விக்னேஷ் ரவி.. நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி.. இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும்..

மற்றொரு ஜோடியாக வரும் டி எஸ் கே & பிரியதர்ஷினி ஆகியோருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. அதுபோல மனைவியை அடக்கி ஆள நினைக்கும் நிரஞ்சனின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.. இவரது மனைவியாக நடித்த அபிராமி அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் : தர்ஷன் ரவி குமார்..

ஒளிப்பதிவாளர் : ஜி.எம்.சுந்தர்..

ஒரு காட்சியில் போனில் சரண்யாவும் விக்னேஷும் பேசிக் கொள்ளும்போது.. நாயகனுக்கு மார்பு வரை ஆங்கிள் வைத்து விட்டு நாயகிக்கு முகத்தை மட்டுமே காட்டியிருக்கிறார்.. இதை மாற்றி வைத்திருக்கலாமே கேமராமேன்.?

சில காட்சிகள் குறும்படம் பார்த்த உணர்வே தருகிறது.. காதலர்கள்… திருமண தம்பதிகள் காட்டும் போது இரண்டு பாடல்கள் வைத்திருக்கலாம்.. ஆனால் ஒரே பாடலுடன் முடித்து விட்டார் இயக்குனர்

கவிஞர் ஜெகன் கவிராஜ் வரிகளில் வந்த இறைவியே பாடல் சிறப்பு.. அதில் முக்கியமாக… “உன் மௌனம் வசைப்பாடுது.. உன் பிரிவு வதைக்குது..” அனுபவித்து எழுதி இருக்கிறார் போல..

காதல் என்பது கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நிறைவு செய்து இருக்கிறார் இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம்.. படத்தை 13 நாட்களில் முடித்து ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளை இயக்குனர் படமாக்கி இருப்பது சிறப்பு.

ஆனால் சில இடங்களில் செயற்கைத் தனமான நடிப்பை நடிகர்கள் கொடுத்திருப்பதை இயக்குனர் கவனித்து கூடுதல் வேலை வாங்கி இருக்கலாம்..

Ka Mu Ka Pi movie review