சந்தோஷ் பிரதாப் – பவ்யா இணைந்த ‘சிக்னல் அட் 11.30’.. நெகிழ்ச்சியில் காத்திருக்கும் இமான்
சந்தோஷ் பிரதாப் – பவ்யா இணைந்த ‘சிக்னல் அட் 11.30’.. நெகிழ்ச்சியில் காத்திருக்கும் இமான்
மர்மம், எதிர்பாராத திருப்பங்கள், ஆழமான உணர்வுகள் என அனைத்தும் கலந்த திரைப்படமாக ‘சிக்னல் அட் 11.30’ உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் பாராட்டியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பின்னணி இசைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே படத்தைப் பார்த்த டி. இமான், அதன் கதைக்களமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவரது பாராட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசையை உருவாக்குவதற்கு முன்பாகவே அதைப் பார்த்து, கதையின் தன்மையையும் காட்சிகளின் உணர்வையும் புரிந்துகொள்வது இசையமைப்பாளர்களுக்கு முக்கியமானது. அந்த வகையில், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் தனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்ததாக டி. இமான் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இமான் கூறுகையில்…
“வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்கள் முதல் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், ‘சிக்னல் அட் 11.30’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
மர்மம், விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு திரில்லர் படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. அதே நேரத்தில், பார்வையாளர்களை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான கதையும் படத்தின் பலம்.
பின்னணி இசைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே படத்தைப் பார்த்தது, அதன் முழுமையான கதையையும் உணர்வையும் புரிந்துகொள்ள உதவியது..
இயக்குநர் மலர்விழி நடேசனின் காட்சியமைப்பு, நடிகர்களின் நடிப்பு, படத்தின் தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையை அமைக்க விரும்பினேன். இந்தப் படத்தில் எனது இசைப் பணியில் புதுமையான முயற்சிகளையும் மேற்கொள்ள இது உந்துதலாக இருந்தது.
உணர்வுப்பூர்வமான கதை, விறுவிறுப்பான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தும் இணைந்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..
மேலும், ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இப்படத்தை வழங்குகின்றனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷெரீப் நடன இயக்குநராகவும், ஆர். கலைவண்ணன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Santhosh Prathap and Bavya starring Signal at 11:30 release update

