சூர்யாவிடம் கதை சொல்ல போகல. கடுமையான விமர்சனம் வேண்டாம்..; ‘அலங்கு’ பட விழாவில் மிஷ்கின் பேச்சு
சூர்யாவிடம் கதை சொல்ல போகல. கடுமையான விமர்சனம் வேண்டாம்..; ‘அலங்கு’ பட விழாவில் மிஷ்கின் பேச்சு
DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் படம் ‘அலங்கு’. இந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது சக்தி பிலிம் பேக்டரி .
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.
இதில் நாயகனாக குணாநிதி நடிக்க அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் வருகிறது.
இந்தப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர் “உறுமீன்”, “பயணிகள் கவனிக்கவும்” என்ற இரு படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ட்ரெய்லரை பார்த்து வெளியிட்டு பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின்…
‘இந்த மேடையில் வந்து ஆடியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் கைதட்டல்கள் தான் ஆதாரம். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களிடமிருந்து தான் காசு வாங்கி சாப்பிடுகிறோம், கார் வாங்கிக் கொள்கிறோம்.
இன்று ரசிகர்கள் பார்க்க பல சமூக தளங்கள் இருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அப்படியான சூழ்நிலையில் நாம் திரையில் சொல்லும் கதை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ஒரு பெரிய படத்தை ரசிகர்கள் கன்னா பின்னா வென்று விமர்சனம் செய்தார்கள். அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது..
ஒரு விஷயம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்கள் வரம்பு மீறி பேசி விடுகிறார்கள். அதை காணும் போது வருத்தமாக இருக்கிறது.
‘கங்குவா’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்தப் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சூர்யா நல்ல நடிகர்.. அழகானவர்.
இன்று நம்மிடையே எம்ஜிஆர் இல்லை சிவாஜியில்லை. ஆனால் அவர்களுடன் பணியாற்றிய நல்ல மனிதர் சிவகுமார் இருக்கிறார்.. அவர்களின் இரண்டு வாரிசுகளும் நல்ல திறமையான நடிகர்கள்.
நான் இப்படி சொல்வதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப் போகிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம்.. நான் அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை.. இயக்கவில்லை.
ஒவ்வொரு படத்திற்கும் நாங்கள் கஷ்டப்படுகிறோம். கஷ்டப்படுவதை சொல்லி உங்களிடம் மடிவிரிக்கவில்லை.
ஒரு ராக்கெட்டை உருவாக்குவதற்கு பல பேர் ஒத்த சிந்தனையோடு பல மணி நேரம் உழைக்கிறார்கள்… அதில் ஒரு சின்ன குறை இருந்தால் கூட அது வானத்தில் வெடித்து விடுகிறது அதேபோலத்தான் சினிமாவும்.. ஆகையால் கொஞ்சம் கருணையோடு விமர்சனம் செய்யுங்கள் ‘ என பேசினார் மிஸ்கின்..
Mysskin support for Suriya at Alangu press meet


