நிகிலா கால்ஷீட் கிடைக்காததால் ‘வாழை’ பட கிளைமாக்ஸை மாற்றிய மாரி செல்வராஜ்
நிகிலா கால்ஷீட் கிடைக்காததால் ‘வாழை’ பட கிளைமாக்ஸை மாற்றிய மாரி செல்வராஜ்
‘வாழை’ வெற்றி விழாவில் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கிய ‘வாழை’ படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…
‘வாழை’ படத்தின் வெற்றிக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது என்னுடைய சக திரையுலக கலைஞர்களுக்குத்தான். அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
நிகிலா விமலை வாழை கிளைமாக்ஸில் டீச்சர் எங்கே சென்றார் என்று பலரும் கேட்டனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டீச்சரின் தேதி கிடைக்கவில்லை.
உண்மையில் படத்தின் க்ளைமாக்ஸ் பாடலை படம் எடுத்து முடித்து ஒரு ஆண்டு கழித்துதான் எடுத்தேன். அதில் தன் தாயின் மடியில் தலைவைத்து சிவனைந்தன் படுத்திருப்பான்.
ஆனால் உண்மையில் பூங்கொடி டீச்சரின் மடியில் அவன் படுத்திருப்பது போன்றுதான் வைக்க நினைத்தேன்.
அப்படி வைத்திருந்தால் இப்போது சிலர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக இருந்திருக்கும்… என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்டது அந்த காட்சியை வைக்காமல் விட்டதற்காகத்தான். என்னுடைய நிஜ வாழ்க்கையில் என்னுடைய அத்தனை ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள்.
எனக்கு சந்தோஷ் நாராயணன் மிகவும் ஷ்பெஷல். ’வாழை’ படத்தை நான்தான் பண்ணுவேன் என்று அடம்பிடித்து வந்தார்.
என்னுடைய பெருமை இந்த படத்தில் நடித்த சிறுவர்கள்தான். எனக்குப் பிறகு என் ஊரிலிருந்து இவர்களை கூட்டிவந்து இங்கு நிறுத்தியதுதான் என் பெருமை.
‘வாழை’ எனக்கும் அந்த குறிப்பிட்ட நாளுக்குமான கதை. அந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. ஆனால் அந்த விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை இதன் மூலம் வெளியே வந்ததே எனக்கு போதும். அந்த உண்மையை நான் இப்போது சொல்கிறேன்.
விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்பதை என்னைவிட தப்பித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோசம். இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்”
இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
Mari Selvaraj changed Vaazhai climax because of Nikhila Vimal

