அஜித் வழியில் கமல்..; இனிமே ‘உலக நாயகன்’ சொல்லாதீங்க.. என்னாச்சு கமல்.?
அஜித் வழியில் கமல்..; இனிமே ‘உலக நாயகன்’ சொல்லாதீங்க.. என்னாச்சு கமல்.?
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டப் பெயர் / ஒரு அடைமொழி வைத்து ரசிகர்கள் அழைப்பது வழக்கம்..
எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர்.. சிவாஜி கணேசன் அவர்களுக்கு நடிகர் திலகம் என்ற அடைமொழி உண்டு.
ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றும் கமல்ஹாசனை உலக நாயகன் என்றும் ரசிகர்கள் இதுவரை அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..
நடிகர் கமல் அவரின் அறிக்கையில்..
என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள், மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான், பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது, திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.
கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் நான்.. என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தும் தன்னை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என அழைக்க வேண்டாம்.. அஜித் அல்லது அஜித் குமார் AK என்று அழைத்தால் போதும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.. தற்போது நடிகர் அஜித்தை தொடர்ந்து கமல்ஹாசனும் இதுபோல அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
Dont call me Ulaganayagan says Kamalhassan

