தூவல் விமர்சனம் 3.5/5.. வலையில் சிக்கிய மனித நேயம்
தூவல் விமர்சனம் 3.5/5.. வலையில் சிக்கிய மனித நேயம்
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத எதார்த்தமான கதைக்களம். உலகளாவிய அளவில் 40 விருதுகளை வாங்கி உள்ளது.
ஸ்டோரி…
தூவல் என்பது மூங்கில்களின் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறை.. நீர்வீழ்ச்சியில் துள்ளி ஓடும் மீன்களைப் பிடிக்கும் முறையாகும்
பொதுவாகவே மீனவர்கள் என்றால் கடல் சார்ந்த பகுதிகளையே சாரும்.. ஆனால் தூவல்.. நீர்வீழ்ச்சியில் மீன் பிடிக்கும் நபர்களை பற்றி கதையாகும்..
தமிழக கர்நாடக எல்லை பகுதியான தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதன் கதைகளம் நடக்கிறது.
நீர்வீழ்ச்சி தொடங்கி ஆற்றில் செல்லும் மீன்களை பிடிக்கும் மக்களுக்கு இடையே ஏழும் பிரச்சனைகளை இந்த படம் அலசுகிறது.. அதிகமாக சம்பாதிக்கும் மக்களை குறி வைக்கும் வன அதிகாரிகளையும் அவர்களின் அரசியலையும் சொல்கிறது.
கேரக்டர்ஸ்…
ராஜவேல் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான படம் ‘தூவல்’.
பவுடர் & பிழை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த இளையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் இளையா என்ற பெயருக்கு ஏற்ற இளமை துள்ளலான கேரக்டர் நடித்திருக்கிறார்.. காதலியுடன் ரொமான்ஸ், நண்பர்களுடன் கலாட்டா, வம்புன்னு வந்தா வரிந்து கட்டும் இளைஞனாக நடிப்பில் முதிர்ச்சி.
இப்படத்தில், தயாரிப்பாளர் ராஜ்குமார் வனத்துறை அதிகாரியாக நயவஞ்சகராக சிறப்பாக நடித்திருக்கிறார்..
மற்ற கேரக்டர்களும் கதையின் ஓட்டத்திற்கு தங்களது பங்களிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் S.A. தர்வேஸ். இசையமைத்திருக்கிறார் சதீஷ்.
படத்தொகுப்பை ராம் கோபி செய்திருக்கிறார். தூவல் திரைப்படத்தை, சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா..
பொதுவாகவே மீனவர்கள் பிரச்சனை என்றால் தமிழக மற்றும் இலங்கை பிரச்சனையை மையப்படுத்திய கதைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் இதில் மீனவர்கள் இல்லை என்றாலும் மூங்கில் வைத்து மீன்களைப் பிடிக்கும் நீர்வீழ்ச்சி பகுதியில் வாழும் மக்களை பற்றி அருமையான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதிலும் முக்கியமாக ஆற்றுப்பகுதியில் வெடிகுண்டு வைத்து மீன்களைப் பிடிக்கும் முறையைக் கூட சொல்லி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
கடலில் இந்தியா – இலங்கை எல்லை பிரச்சினையை போல தமிழகம் – கர்நாடக எல்லை பிரச்சனையும் இதில் எழும்.. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழர்களுக்குள் எழும் பிரச்சனையை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
கிளைமாக்ஸ் காட்சியில் வலையில் சிக்கிய மீனைப் போல மனதில் சிக்கும் மனிதாபிமானத்தை சிறுவர்கள் மூலம் காட்டியிருப்பது சிறந்த கற்பனை.
Thooval movie Review

