‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உங்களை அக்கறையோடு மாற்றும்..; பாராட்டிய ‘நந்தன்’ சரவணன்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உங்களை அக்கறையோடு மாற்றும்..; பாராட்டிய ‘நந்தன்’ சரவணன்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உங்களை அக்கறையோடு மாற்றும்..; பாராட்டிய ‘நந்தன்’ சரவணன்

 

கத்துக்குட்டி உடன்பிறப்பே மற்றும் நந்தன் ஆகிய படங்களின் இயக்குனர் ரா. சரவணன் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்து பக்கம் பக்கமாக தன் சமூக வலைதள பக்கத்தில் பாராட்டு கடிதம் கொடுத்திருக்கிறார்..

இதோ அந்த வரிகள்..

எப்போதுமே சசிகுமார் சாரின் படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலிலேயே நின்றுகொண்டு அவருக்கு போன் செய்வேன். அதுதான் வழக்கம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்துவிட்டு சாரிடம் பேசவில்லை; யாரிடமும் பேசவில்லை. தியேட்டரிலிருந்து வீட்டுக்கு வந்து நிலைப்படியில் அமர்கிறேன். என்னை ஆசுவாசமாக்கிக் கொள்ளவே கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. நீள ஆறாக மனதுக்குள் பெருக்கெடுக்கும் உணர்வுகளைக் கண் கலங்காமல் சசிகுமார் சாரிடம் அப்படியே ஒப்பிக்க வேண்டும். கொஞ்சமும் கலங்கக்கூடாது.

காரணம், அவர் பெருவெற்றி அடைந்திருக்கும் தருணம் இது. உற்சாகம், கைத்தட்டல், கொண்டாட்டம் என்றுதான் இனி அவர் முகத்தைப் பார்க்க வேண்டும். அவர் பட்ட பாடுகள் போதும். முதல் படத்திலேயே பன்முக வெற்றியை அவருக்குப் பரிசளித்த உலகம், ஆற்று வேகத்தில் சிக்கிய கூழாங்கல்லாய் அவரை எல்லாமும் செய்து பார்த்துவிட்டது. அவருடைய மனதைத் தவிர மற்ற யாவையும் சேதாரப்படுத்தியது. எந்தச் சூழலிலும் இரக்கம் மாறாத, பிறர் துயரம் பொறுக்காத அந்தத் தும்பை மனதுக்குத்தான் இத்தனை பெரிய வெற்றியை நீட்டி இருக்கிறது காலம். கதாநாயகப் பிம்பத்துக்கும் அவருடைய உண்மையான குணத்துக்கும் ஒத்துப்போகும் தன்மைதான் இந்தப் படத்தின் ஹீரோயிசம். “ஒருத்தன் பின்னால கூட்டம் கூடுதுன்னா ஒண்ணு பணம் இருக்கனும், இல்ல அதிகாரம் இருக்கனும். உங்களுக்கு மனசு இருக்கு சார்…” என @thilak_ramesh பேசுகிற க்ளைமாக்ஸ் வார்த்தைகள் சசி சாருக்கான பட்டயம். எத்தகைய நிலையிலும் நெறிபிறழாத அவருடைய நேர்மைக்குக் கிடைத்த உச்சிமுகரல்.

திரைப்படம் என்பது பல்வேறு மாயாஜாலங்களை, மிரட்டல்களை, வியப்புகளை விதைக்கிற களம் என்றுதான் நினைத்திருப்போம். இந்தப் படம் அப்படியெல்லாம் இல்லை. சக மனிதர்களைத் திரும்பிப் பார்க்கும் மிக இயல்பான பார்வை… கதாநாயகன் பக்கத்து வீட்டு இளைஞனுக்காகப் போர்க்குரல் எழுப்பவில்லை. போராடவில்லை. ‘தம்பி, சாப்பிட்டீங்களா?’ என்றுதான் கேட்கிறார்.

தாய்க்கு நிகரான அக்கறையாக மாறும் அந்த வார்த்தை, ஒரு இளைஞனின் வாழ்க்கையையே மாற்றுகிறது. இது ஒரு பருக்கை உதாரணம்… இதைப்போல் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் படம் முழுக்க அணிவகுக்கின்றன. YogiBabu வரும்போதெல்லாம் தெறிக்கிறது திரையரங்கம்.

90 சதவிகிதக் காட்சிகளையும் ஹீரோவையே மையப்படுத்தி எழுதப்படுகிற காலகட்டத்தில், அன்பின் பெருவெளியில் அத்தனை பேரும் கதாநாயகர்கள்தான் எனக் காட்டி இருக்கிறார் புதுமுக இயக்குநர் தம்பி அபிஷன் ஜிவிந்த்..

ஒருவழியாய் சசிகுமார் சாருக்கு போன் பண்ணினேன். “உங்க ஆபிஸ்க்குள்ளதான் நுழையிறேன்…” என்றார். பதறி ஓடிப்போய் சசி சாரின் கைகளைப் பற்றினேன். அருகே நின்ற இயக்குநர் தம்பி அபிஷனை நெஞ்சோடு கட்டிக் கொண்டேன். “யார் சார் இந்தப் பையன்… உங்களுக்குன்னே பிறந்து வளர்ந்து கதை எழுதியிருக்காப்புல…” என்றேன் சிலிர்த்துப்போய். படத்தின் தயாரிப்பாளர் பேரன்புமிகு சொக்கத்தங்கம் யுவராஜ் கணேசனும் வந்திருந்தார். ‘இந்தக் காலத்திலும் இப்படியொரு பிள்ளையா?’ எனப் பார்க்கிற போதெல்லாம் நான் ஆச்சர்யப்படுகிற ஆள். காலத்திற்கும் மறக்க முடியாத காவியத்தைக் கொடுத்தவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்து நெகிழ்ந்தோம்..

ஒரு வெற்றிக்காக எந்த வியூகங்களையும் வகுக்கத் துணிகிற இந்தப் பரபரப்பு உலகத்தில், மனிதத்தையும் அன்பையும் தாண்டி இந்த உலகில் வேறு எது வெற்றி பெற முடியும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் கதாநாயகனும் ஒருமித்து உணர்த்தி இருக்கிறார்கள். சசிகுமார், யுவராஜ் கணேசன் என்கிற இரு நல்லவர்களின் கூட்டணி நல்ல இயக்குநரை நமக்கு அறிமுகமாக்கி நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறது..

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்த பிறகு எதிர்ப்படுகிற மனிதர்களைப் பார்த்து நீங்கள் புன்னகைப்பீர்கள். ‘சாப்பிட்டீங்களா?’ என அக்கறையோடு கேட்பீர்கள். அக்கம் பக்கத்து வீடுகளின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்பீர்கள். எதையுமே செய்ய முடியாவிட்டாலும் உதடுகளில் எப்போதும் கொஞ்சம் புன்னகையை ஏந்துவீர்கள். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் அந்தளவுக்கு உங்களை மாற்றும்..

@SasikumarDir
@abishanjeevinth
@SimranbaggaOffc
@Foxy_here03 @yogibabu_offi @barathvikraman @MillionOff

#Touristfamily #டூரிஸ்ட்ஃபேமிலி
#touristfamily #sasikumar #simran #seanroldan #abishanjeevinth #yogibabu #rameshthilak #msbhaskar

Nandhan Director Saravanan appreciated Tourist Family

 

 

 

 

Related articles