‘வீர தீர சூரன் பார்ட் 2’.. மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ஸ்டைலில் கிராமத்து படம்.. – சூர்யா
‘வீர தீர சூரன் பார்ட் 2’.. மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ஸ்டைலில் கிராமத்து படம்.. – சூர்யா
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர சூரன் – பார்ட் 2′ வெளியாகிறது..
இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர் என் வி ஆர் சினிமாஸ் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விநியோகஸ்தர் / தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், ” வீர தீர சூரன் படம் சிறப்பாக தயாராகி இருக்கிறது. நடித்திருக்கும் கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். அதிலும் சீயான் விக்ரம் இந்த படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்.
இங்கு நான்கு படங்கள் வெளியானாலும் ஐந்து படங்கள் வெளியானாலும் பார்த்து ரசிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல சினிமாவை எதிர்பார்க்கிறார்கள். இரண்டரை மணி நேரம் சினிமாவிற்காக ஒதுக்குகிறார்கள் என்றால்.. அவர்களை திருப்திப்படுத்துவது படக் குழுவினரின் கடமை. ஒரு படம் நன்றாக இருந்தால் காலைக்காட்சியில் இருந்து வேர்ட் ஆஃப் மவுத் மூலமாகவும், சமூக வலைதள பக்கத்தில் ஒரே ஒரு போஸ்ட் போட்டாலும் போதும். படம் ஹிட் ஆகிவிடும். காலை காட்சியை விட இரவு காட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிடும்..
அந்த வகையில் :வீர தீர சூரன்’ திரைப்படம் இங்கு திரையிடப்பட்டு சென்சேஸனல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். படத்தில் நடித்த நடிகர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்க வேண்டும். இந்த படத்தில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் ” என்றார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்…
”அனைவருக்கும் வணக்கம். தெலுங்கிலும் சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லருக்கும் இங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழாக இருந்தாலும்… தெலுங்காக இருந்தாலும் … கன்னடமாக இருந்தாலும் … மலையாளமாக இருந்தாலும்… ரசிகர்கள். எந்த ஜானரிலான படங்களாக இருந்தாலும் நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இந்தப் படம் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட படம். இருந்தாலும் இது கிராமிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. மார்ட்டின் ஸ்கோர்செஸி ராஜமுந்திரி கதைக்களமாக கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ..! அப்படி இருக்கும் இந்த திரைப்படம். இயக்குநர் அருண்குமார் பெருந்தன்மையானவர் நல்ல மனிதர். திறமைசாலி.
இந்த படத்தில் 15 நிமிட நீளத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இருக்கிறது. அது இரவு நேரத்தில் வரும் காட்சி. சிங்கிள் ஷாட்டில் படமாக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். இதற்காக பத்து நாட்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். நான்காவது நாள் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அது கடைசி நாள் படப்பிடிப்பு. அன்று இந்த காட்சியை படமாக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருந்தோம். முதல் டேக் ஐந்து நிமிடங்களில் ஒருங்கிணைப்பு இல்லாததால் திட்டமிட்டபடி படமாக்கப்படவில்லை.
அடுத்த டேக் ஒன்பது நிமிடங்கள் வரை சென்றது. அதன் பிறகு மூன்று- நான்கு- ஐந்து -ஆறு -ஏழு -என்று டேக் சென்று கொண்டே இருந்தது. ஒருங்கிணைப்பில் துல்லியம் இல்லாததால்.. இயக்குநர் எதிர்பார்த்தபடி அந்த காட்சி அமையவில்லை. மணி அதிகாலை 4 மணியை நெருங்கி கொண்டிருந்தது. மீண்டும் அனைத்தையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகும். திட்டமிட்டபடி காட்சியை படமாக்க முடியாதோ..! என்ற கவலையில்.. இயக்குநர் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு நாங்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி.. தற்போது மீண்டும் முயற்சிக்கும் போது வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்தோம். அனைவரும் இந்த காட்சி நன்றாக வரவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினோம்.
அதன் பிறகு சரியாக 5:00 மணிக்கு நடிக்க தொடங்கினோம். அந்த ஷாட் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற்று 5 16 க்கு முடிவடைந்தது..
நடிகர் விக்ரம் அவர்களை நினைத்து தென்னிந்திய சினிமா முழுவதும் பெருமைப்பட வேண்டும்.. அவருடன் இணைந்து நடித்ததில் பெருமை கொள்கிறேன்.. ”
என்றார் எஸ் ஜே சூர்யா..
Sj Surya speech about Veera Dheera Sooran 2 and Vikram

