The Dark Heaven : நண்பர்கள் வாழ்த்த மாட்டாங்க.. – சித்து.; ‘பிக் பாஸ்’ வாய்ப்பு தராது.. – தர்ஷிகா

The Dark Heaven : நண்பர்கள் வாழ்த்த மாட்டாங்க.. – சித்து.; ‘பிக் பாஸ்’ வாய்ப்பு தராது.. – தர்ஷிகா
படங்களில் இரண்டே ரகம்தான். கதாநாயகன் படங்கள், கதைப் படங்கள்: தயாரிப்பாளர் பேச்சு!
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது
விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில்
சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் , விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது,
“ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.
நல்ல விஷூவலுக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அதனால்தான்
இப்படி அனைத்தையும் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு போய் படபிடிப்பு நடத்தினோம். இதற்காக பத்து உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தார்கள்.
படப்பிடிப்புக்கு முந்திய முன் தயாரிப்பும் சிறப்பாக இருந்தது ” என்றார்..
படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் பேசும் போது,
“இந்தத் திரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் . ‘டி 3’ படக் குழுவே இதிலும் இணைந்துள்ளது”
என்றார் .
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
” இயக்குநர் பாலாஜி அவரது முதல் படம் ‘டி3’ மூலம் பழக்கம். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடித்தது . முழு ஸ்கிரிப்ட் கேட்டேன் தர முடியாது என்றார் .எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டுகிறேன் அதையெல்லாம், பார்த்து பின்னணி இசையமையுங்கள் என்றார். அப்படிப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தன. அதற்கேற்றபடி பின்னணி இசையமைத்தோம். எப்போது இயக்குநர் என்னைப் பார்க்க வந்தாலும் உதவி இயக்குநர் குழுவோடு தான் வருவார்.
இந்தப் படத்திற்குப் பெரிய நட்சத்திரங்களுக்கான படம் போல் ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்..
நடிகர் ஜெயக்குமார் பேசும்போது,
“இந்தப் படத்தில் பாலாஜி உடன் பணியாற்றியது முதல் ஏதோ ஒரு குடும்ப பந்தம் போல் ஏற்பட்டு விட்டது .அவர் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக் கடந்து வந்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நேரில் பார்த்தபோது அவரது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டேன்.அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. எல்லா ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இவரின் மனைவி இவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இப்படி எல்லாருக்கும் மனைவி அமைந்தால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.இயக்குநர் பாலாஜியை எனது தம்பியாக நான் பார்க்கிறேன் “என்றார்..
நாயகி தர்ஷிகா பேசும்போது,
“இது என் ஒரு கனவின் முதல் மேடை. இங்கே உள்ள ஒவ்வொருவரது கனவாகவும் இந்தப் படம் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி அனைவரும் உழைத்தார்கள்.
பிக் பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு கிடைத்துவிடாது.சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம்.பிக் பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்.படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சித்து எதார்த்தமான மனிதர். நான் இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர் .அந்தப் பெயரை எனக்குப் பிடிக்கும். அனைவரும் இந்த படத்திற்காக உழைத்தார்கள். அனைவரது கனவும் இதில் இருக்கிறது.படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,
“இந்தப் படத்திற்காக வேறொரு கதாநாயகனை வைத்து எடுத்தோம் 60 முதல் 70% முடித்து விட்டோம்.அவர் கொடுத்த பிரச்சினைகள் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம். ஒரு கட்டத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே கைவிட்டு விட்டோம்.என்ன காரணம்? ஒரு நடிகர் டூப் போட்டு நடிக்க வரலாம், ‘டோப்’ போட்டு வந்து நடிக்கக் கூடாது.
அதனால் அதை கைவிட்டு விட்டோம். ஒரு பிரசவம் ஆகிற போது கருக்கலைந்தது மாதிரியான ஒரு வலி மிகுந்த அனுபவம். இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் மனச்சோர்வடைந்து விட்டார்கள்.
மீண்டும் அதை எடுக்கிற போது முதலில் எடுத்த செலவுகளும் பட்ஜெட்டில் சேர்ந்து கொள்ளும் .எனவே செலவுத்தொகை இரட்டிப்பாகும் .அதை நாங்கள் ஈடு கட்டுவதற்காக அனைவரும் பல நாட்கள் உடலை வருத்திக்கொண்டு உழைத்தோம். இரண்டு கால் ஷீட் இரண்டரை கால் ஷீட் என்றும் 48 மணி நேரம் கூட தொடர்ந்து பணியாற்றியும் படப்பிடிப்பு நடத்தினோம் . இப்படி இழப்புகளை உழைப்பின் மூலம் ஈடு கட்டினோம்.
நான் சாமி கும்பிடுவேன் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.உண்மையிலே இருக்கிறதா இல்லையா?ஆனால் இந்தப் படத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.
கதாநாயகன் வராத போது அவர் இல்லாத காட்சிகளை நாங்கள் காட்டுப் பகுதியில் எடுத்தோம் . காட்சிப்படி ஒரு வர் சாமி ஆட வேண்டும். அவர் இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஆடினார் ஆடினார், ஒரு மணி நேரம் ஆடிக்கொண்டே இருந்தார். அவருக்கு உண்மையிலேயே சாமி வந்துவிட்டது.இது மேக்கிங் வீடியோவில் இருக்கிறது.
மூன்று மாதம் இடைவெளி வந்தது . அந்த வீடியோவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகுதான் சித்து இந்தப் படத்தில் இணைந்தார் .ஆனால் அவர் குரலைக் கேட்டபோது எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த மேக்கிங் வீடியோவில் கடைசி 30 வினாடிகளில் அவரது குரல் இருந்தது. அந்த சாமியாடும் வீடியோ எடுத்த போது யாரோ சித்து பேசுவதை மொபைல் போனில் ஒலிக்க விட்டிருந்தார்கள். இதன்படி அந்த நடிகருக்குப் பிறகு சித்து தான் தொடர்வார் என்கிற குறிப்பு அந்த மேக்கிங் வீடியோவில் இருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.
அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.இது ஒரு ஆன்மீக அனுபவம்.
நான் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் பெரிய கதாநாயகர் இருந்தால் அந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். தியேட்டர்கள் நிறைய கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றை இங்கே பரிசீலனை செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். ரீ ரிலீஸ் செய்யப்படும் மறு வெளியீட்டுப் படங்களுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று டிக்கெட் போடுவது போல் எங்களை போல நல்ல கதையுள்ள கொண்ட கன்டென்ட் பேஸ்டு படங்களுக்கு முதல் ஷோவுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று போட்டால் வருகிறவர்களின் மவுத் டாக் மூலம் படம் பற்றி மக்களிடம் சென்றடையும்.
இல்லாவிட்டால் முதல் ஷோவுக்கு 50 பேர் 100 பேர் தான் வருவார்கள் .ஆனால் 50 ரூபாய் 100 ரூபாய் 75 ரூபாய் என்று டிக்கெட் போட்டால் 200 பேருக்கு மேல் வருவார்கள். வாய் இருந்தால் தானே,வாய் வழியாக பேசப்படும். எனவே அப்படி கட்டணத்தைக் குறைத்து அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.
நிறைய படங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன்?வாராவாரம் வருகிற ஆறு – ஏழு படங்களில் எத்தனை உருப்படியாக உள்ளன? நிறைய உப்புமா படங்கள் வருவதால் தான் சினிமாவில் பிரச்சனையே வருகிறது நீங்கள் படத்தின் தரத்தைப் பார்த்து வடிகட்டி இந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். முதல் 100 டிக்கெட் 50 ரூபாய் 75 ரூபாய் என்றாவது நீங்கள் கொடுக்கலாம்..
ஒரு காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் படங்கள், பிறகு ரஜினி கமல் படங்கள், விஜய் அஜித் படங்கள் என்று இரண்டு வகையான படங்களுக்கு தான் வரவேற்பு இருந்தது. அவை ஹீரோ கண்டன்ட் உள்ள படங்கள் என்று சொல்லலாம். இப்போது இரண்டு வகையான படங்கள் மட்டுமே வருகின்றன. ஒன்று ஹீரோ கண்டன்ட் படங்கள், அடுத்தது ஸ்டோரி கண்டன்ட் படங்கள். அதாவது கதாநாயகன் உள்ள படங்கள் ,கதையுள்ள படங்கள்.இந்த இரண்டு வகை மட்டுமே இப்போது உள்ளன.
இப்படிக் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தான் இந்தப் படம் வந்திருக்கிறது” என்றார்.
சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது,
“நான் டீசர் பார்த்தேன் நன்றாக உள்ளது.
இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அமைதியாக இருப்பார்,பேசமாட்டார் என்று சொன்னார்கள். ஆனால் தனது படம் பேசட்டும் என்று இருக்கிறார். அவரது படம் பேசும்.
எனது இயக்குநர் செல்வராகவன் கூறுவார், படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார் .அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும். அப்படிப்பட்ட திறமை கொண்ட இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பாலாஜி பேசும்போது,
“இது ஒரு உணர்ச்சிகரமான மேடை .ஒரு முடிவிலிருந்து மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு என்கிற நிலையில் இருந்து மீண்டும் வந்து இங்கே நிற்கிறோம். இதற்காகப் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த ஆதரவுகளின் பலம்தான் என்னை நடத்தி வந்து இருக்கிறது.
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் சினிமாவை அனுமதிக்காத குடும்பத்திலிருந்து இங்கே வந்தவன்.இங்கே வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தெரிந்தன.
யாருமே இப்படி ஒரு முடிவிலிருந்து துடைத்தெறியப்பட்டதிலிருந்து மீண்டு எழுந்து வர மாட்டார்கள். நாங்கள் மறுபடியும் தொடங்கி இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உடன் நின்று உழைத்த மனிதர்களின் ஆதரவும் ஊக்கமும் தட்டிக் கொடுக்கும் நம்பிக்கையும்தான் எங்களை இவ்வளவு தூரம் இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. முதல் ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் சித்து ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இப்படி நடிக்க ஒப்புக்கொள்வது சிரமம். ஆனால் சித்து சமரசம் செய்து நடிக்க வந்தார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். தர்ஷிகாவுக்கும் நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் சாரை பல இரவுகள் நான் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.
படத்தில் ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அப்படி வைத்தேன் .பொருத்தமாக இருக்கிறது.அந்த மலைக் கிராமத்தில் ஒவ்வொரு ஏழு ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம்.
எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த என் தேவதை செந்தில்குமாரிக்கு என் நன்றி” என்றார் .
படத்தின் நாயகன் சித்து பேசும்போது,
” எனது வாழ்க்கையை தொடங்கி வைத்து எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் சார் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி. அவர் அறிமுகத்தால் தான் இந்த வண்டி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய குடும்பமாக அவர் இருக்கிறார். எப்போதும் அமைதியாக இருப்பவர்.எப்படிப்பட்ட விஷயத்தையும் அவர் எளிதாகக் கையாள்வார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.இது அனைவருக்கும் தேவை. நான் எதுவாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து மனதில் போட்டு குழப்பிக் கொள்வேன்.நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
எனது மனைவி ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.
பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பயங்கரமான ஒரு கெட்ட நேரம் என்று தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை பல பிரச்சினைகள் என்று இருந்தன.மிகவும் மன அழுத்தத்திலிருந்து கொண்டிருந்தேன்.அடுத்த கட்டம் என்ன என்று புரியாமல் இருந்தேன், நிறைய யோசித்தேன். நமக்கு நேரம் சரியில்லையோ, ஒரு ராசி சரியில்லையோ என்று யூட்யூபில் பார்க்கும்போது மேலும் மன அழுத்தம் அதிகமானது. தலைப்புகளைப் பார்க்கும் போதே மோசமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றும் நம்மை பயமுறுத்துவது போலவே இருக்கும்.வயது வரம்பைக் கடந்து நடக்கப் போகிறது, வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது,இந்தத் தேதியில் இது நடந்தே தீரும் என்று எல்லாம் பயமுறுத்தினார்கள். இது வேலைக்காகாது என்று அதைப் பார்ப்பதை விட்டு விட்டேன்.
அப்போதெல்லாம் நான்வருத்தமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை கூல் கூல் என்று கூறி தணிப்பது என் மனைவி ஷ்ரேயா தான்.
எல்லாரையும் போலவே நல்ல படம் நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.
ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். சந்திக்க வேண்டும் என்றார்.அப்பொழுது எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று நினைத்தேன்.நான் ‘டி3 ‘படம் பார்த்ததில்லை. இருந்தாலும் தொழில் நுப்ப ரீதியாக ட்ரெய்லர் டீசர் எல்லாம் நன்றாக இருந்தன. பிறகு நானே அழைத்தேன் போய்ச் சந்தித்தேன், கதை கூறினார் நன்றாக இருந்தது.போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. புதிதாகவும் இருக்கும் சவாலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அவர் நல்ல திறமைசாலி. அவர் திறமைக்கு பெரிய இடத்துக்கு செல்வார் .யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்.அவர் அப்படிப்பட்ட நேர்த்தியான வேலைக்காரர்.
இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து எடுத்திருந்தாலும் அதைப் போட்டு பார்க்கும் போது இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் அவர் எடுத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஒரு திருத்தம் கூட சொல்ல முடியாது. திருத்தத்துக்கு வேலை இருக்காது. அவ்வளவு சரியாக செய்வார். நள்ளிரவு இரண்டு மணிக்குப் படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார்.
வேலை பார்க்காமலே உடல் வலி இருக்கும் அளவிற்கு நாங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.அதற்குப் பிறகு போய் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் அத்தனை பேரும் அவ்வளவு உழைத்தார்கள்.
இன்ஸ்டாகிராமைப் பார்த்து நமது நண்பர்களைப் பற்றி அறிய முடிந்தது .இன்ஸ்டாகிராமில் நாம் சிரமத்தில் இருக்கும் போது ஆறுதலாகசொல்வார்கள் என்று போஸ்ட் போடும்போது ஆறுதலாக கமெண்ட்ஸ்கள் வரும்.ஆனால் சற்று முன்னேறி நல்ல விஷயத்திற்காக வாழ்த்துக்கள் எதிர்பார்த்து போடும்போது வராது.
முகம் தெரியாதவர்கள் கூட ஆதரவு தந்து வாழ்த்தியிருந்தார்கள். ஆனால் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்த மனதில்லை. அப்போது ‘டாடா’ படத்தில் வரும் கவின் பேசும் வசனம் தான் என் நினைவுக்கு வந்தது. ‘நாம் நல்லா இருக்கலாம் . ஆனா உங்களைவிட நான் நல்லா இருந்திடக் கூடாது’ என்று தான் நினைப்பார்கள்.அப்படி பல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டேன். இந்தப்படம் நன்றாக வந்து இருக்கிறது அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் “என்றார்.
நடிகர் சித்துவின் மனைவி ஷ்ரேயா பேசும்போது,
“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .சித்துவின் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதுவரை அவரது கடின உழைப்பால் தான் வந்திருக்கிறார்.எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
Siddhu and Dharshika emotional speech at The Dark Heaven event