JUST IN நடிகர் ராஜேஷ் காலமானார்..; ரஜினி & கமல் & டி. ஆர். & நடிகர் சங்கம் இரங்கல்

JUST IN நடிகர் ராஜேஷ் காலமானார்..; ரஜினி & கமல் & டி. ஆர். & நடிகர் சங்கம் இரங்கல்

 

JUST IN நடிகர் ராஜேஷ் காலமானார்..; ரஜினி & கமல் & டி. ஆர். & நடிகர் சங்கம் இரங்கல்

 

‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானார் நடிகர் ராஜேஷ்.. இவருக்கு தற்போது 75 வயது ஆகிறது..

இவர் முதலில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 1974 ஆம் ஆண்டில் தான் திரை உலகில் இவர் அறிமுகமானார்.

1979 ஆம் ஆண்டில் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்..

அந்த ஏழு நாட்கள் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.. டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து இருக்கிறார்..

இவர் இன்று மே 29 மூச்சு திணறல் காரணமாக காலமானார்.. இவரது மறைவை ஒட்டித் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய X தளத்தில் அருமை நண்பரை இழந்து விட்டதாக வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

#ராஜேஷ் – ரஜினிகாந்த் —

தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்… தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

—– கமல்ஹாசன்

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் ராஜேஷ் தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்புத் தொழில் மட்டுமின்றி ஹோட்டல் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் பணிகளிலும் நடிகர் ராஜேஷ் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜேஷின் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதால் அவர் மே 31ஆம் தேதி சென்னை வரவிருப்பதால் ஜூன் ஒன்றாம் தேதி தான் இறுதி சடங்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Senior Actor Rajesh passed away at Chennai

தேதி : 29.05.2025

இரங்கல் செய்தி

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் எண்ணற்ற கதாபாத்திரங்களின் மூலம் மக்களை நெகிழ வைத்து சிந்திக்க வைத்து சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஆகச்சிறந்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினருமான திரு.ராஜேஷ் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தியது அறிந்து அளப்பரிய அதிர்ச்சிக்கும், சொல்லொண்ணா ஆழ்ந்த துயரத்திற்கும் ஆளாகியுள்ளோம். அவரது அகால மறைவு எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்..

தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், சமூக வலைத்தளங்களில் தனது சமுதாய விழிப்புணர்வு பேட்டிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல் பகிர்வுகளாலும் எண்ணற்றவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கியது அவரது தன்னலம் கருதா சமுதாயப் பொதுநோக்கு பார்வைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது…

அவரது மறைவு திரையுலகிற்கும், குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் ஒரு நிரந்தர இழப்பாகும். அவரது மறைவால் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது புகழ் நீடூழி நிலைத்திருக்க வேண்டுகிறோம்..

# தென்னிந்திய நடிகர் சங்கம்

—-

*நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் அவர்கள் நடிப்பாற்றல் கொண்டவர், பேச்சாற்றல் மிக்கவர், தனித்தன்மை பெற்றவர், தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர்.

அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

T. ராஜேந்தர், எம்.ஏ.
‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

***

 

—-