அமரனுக்கு 3 தேசிய விருதுகள்..; சிவகார்த்திகேயன் & சாய் பல்லவிக்கு கமல் அட்வைஸ்
அமரனுக்கு 3 தேசிய விருதுகள்..; சிவகார்த்திகேயன் & சாய் பல்லவிக்கு கமல் அட்வைஸ்
46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது..
இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது..
அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது.
கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக ‘அமரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் மூன்று உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
– சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது – ராஜ்குமார் பெரியசாமி
– சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) தேசிய விருது – ஜி.வி. பிரகாஷ் குமார்
– சிறந்த படத்தொகுப்பாளர் தேசிய விருது – ஆர். கலைவாணன்

கதையைத் தெளிவான பார்வையுடனும், வலுவான திரைக்கதை மொழியுடனும் திரையில் உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த தேசிய விருதைப் பெற்றுள்ளார். படத்தின் உணர்வுகளையும், காட்சிகளின் தீவிரத்தையும் தனது பின்னணி இசையின் மூலம் மேலும் வலுப்படுத்தியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திரைப்படத்தின் கதை சொல்லும் ஓட்டத்தை நேர்த்தியாக வடிவமைத்த ஆர். கலைவாணனின் படத்தொகுப்பு தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று தேசிய விருதுகளும் தனிநபர்களின் சாதனையை மட்டுமல்லாமல், தயாரிப்பாளரின் நம்பிக்கை, கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்புக் குழுவின் ஒட்டுமொத்த உழைப்பின் வெற்றியையும் கொண்டாடுகின்றன.
46-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அர்த்தமுள்ள, லட்சியமிக்க மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் இந்திய திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கும் தனது உறுதியை ‘அமரன்’ திரைப்படத்தின் இந்த தேசிய விருதுகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விருதுகள், அமரன் திரைப்படத்தை ஒரு மகத்தான காவியமாக மாற்றிய மூன்று கலைஞர்களின் அசாத்திய திறமையைக் கொண்டாடுகின்றன.
அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாய்திரு நாட்டிற்காகத் தீரத்துடன் போராடிய இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வீரர்களில் ஒருவருக்குச் செலுத்தும் மரியாதையாக இப்படம் அமைந்துள்ளது.

கமல்ஹாசன் கூறியது:
“சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இது. சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் ஆர். கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது..
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகள். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.
அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன..
Kamal wishes Amaran team and advice to Sivakarthikeyan and Saipallavi

