பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ படத்தில் முதன்முறையாக நடிகராகும் ஆஸ்கர் நாயகன்
பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ படத்தில் முதன்முறையாக நடிகராகும் ஆஸ்கர் நாயகன்
*‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது..
“மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்..
இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது…
“‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன் இணைந்து நடந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாடல் திரையில் மிக அழகாக உருவாகியுள்ளது. பிரபுதேவா சார் இதில் தன் சிறந்த நடனங்களில் ஒன்றை வழங்கியிருக்கிறார். கொரியோகிராஃபர் சேகர் மாஸ்டருக்கு என் மனமார்ந்த நன்றி.
ஏ.ஆர், ரகுமான் சார் இந்த பாடல் முழுவதும் வருகிறார். அவரது இருப்பு, பாடலுக்கு கூடுதல் அழகையும் சுவாரஸ்யத்தையும் தந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்குமாறு சொன்ன போது , அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இது படத்தை காணும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும்.
அவரை முதல் முதலாக நடிகராக இயக்கிய அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படம் தொடங்கிய முதல் நாள் முதல் அவர் தந்த ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். செட்டில் அவர் நடிகராக ரசித்துக் கலந்து கொண்ட தருணங்கள் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.” திரையில் இதை காணும் ரசிகர்களுக்கும் இது எதிர்பாராத அனுபவமாக இருக்கும்..

அதே போல் பிரபுதேவா கதாப்பாத்திரமும் இப்படத்தில் மிகச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ‘பாபூட்டி’ என்ற இளம் திரைப்பட நடன இயக்குநராக நடித்துள்ளார். நடனம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
மேலும், யோகி பாபு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘கவரிமான் நாராயணன்’ மற்றும் ‘ஆட்டுக்கால் அழகு ராசா’ என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன், மூன்றாவது கதாபாத்திரமாக ‘துபாய் மேத்யூ’ என்ற வேடத்திலும் தோன்றுகிறார்..
இது படத்தின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான அம்சமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும். மேலும் “யோகி பாபு சாரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆடியோ வெளியீட்டில் அறிவிக்கப்படும்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்தார்.
இப்படத்தில் அஜு வர்கீஸ் (‘லார்ட் ஜோகோவிச்’), அர்ஜுன் அசோகன் (‘லூனா’), சாட்ச் (‘ஜாஸ்மின்’), சுஷ்மிதா (‘சில்க்’), நிஷ்மா (‘நக்மா’), ஸ்வாமிநாதன் (‘பெரிய பண்ணை’), ரெடின் கிங்ஸ்லி (‘கண்ணு குட்டி’), ராஜேந்திரன் (‘மல்லிகார்ஜுன்’), தீபா அக்கா (‘கற்பூரழகி’), சந்தோஷ் ஜேக்கப் (‘தவசி’) மற்றும் ராம்குமார் (‘ராஜ் பப்பர்’) ஆகிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“இத்தனை திறமையான கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது பெரும் ஆசீர்வாதம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்..
பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் போன்ற மாபெரும் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைவது மட்டுமல்லாமல், புதுமையான கதை சொல்லலுடன் “மூன்வாக்” ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. இயக்குநர் மனோஜ் NS இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார் என்ற ஆவலைத்தூண்டியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம் 2026 மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Music Composer AR Rahman first time as actor in Moon Walk
*“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!*
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.
அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.
அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.
அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.
நடிகர் யோகி பாபு, இந்த திரைப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்து, இது கதையை முன்னெடுத்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல வேடங்கள் வெளிவரும் என தெரிவித்தார்.
நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். அர்ஜுன் அசோகனின் ‘மூன்வாக் நடன’ அசைவிற்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.
நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் ஆகியோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, திரைப்படத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, வி அன்பீடபிள்ஸ், KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.
இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். அதிகாரப்பூர்வ பாடல்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது..

